உதவி: எதிரியா? மனிதனா?
ஒரு நாள் மாலை, முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தன் அலுவலக வேலையை முடித்துவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். சாலையில் ஒருவன் மயங்கிக் கிடப்பதைப் பார்த்தார்.
“காரை நிறுத்து! யாரது? போய் பார்த்துட்டு வா” என்று ஓட்டுநரிடம் கூறினார்.
ஓட்டுநர் ஓடி வந்து, “அய்யா, இவர் ஒரு பத்திரிகையாளர்... உங்களை அடிக்கடி கடுமையாக விமர்சனம் செய்து எழுதுபவர்” என்றார்.
எம்.ஜி.ஆர் ஒரு நொடிகூட யோசிக்கவில்லை. “அவர் யாராயிருந்தாலும் பரவாயில்லை. முதலில் அவருக்கு சிகிச்சை கொடுங்கள்” என்று சொல்லி, உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தார்.
உயிர் காத்த கொடை
பத்திரிகையாளரைப் பரிசோதித்த மருத்துவர்கள், “உடனே அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும், இல்லையென்றால் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை” என்றனர்.
அந்த அறுவைச் சிகிச்சைக்கான செலவுகள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் தன் சொந்தப் பணத்தில் ஏற்றுக்கொண்டார். சிறந்த சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அவருடைய உதவியால், அந்தப் பத்திரிகையாளர் உயிர் பிழைத்தார். சில மாதங்களில் குணமடைந்து, மீண்டும் தன் வேலையைத் தொடங்கினார்.
மறக்கப்படாத உண்மை
ஆனால், அந்தப் பத்திரிகையாளர் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. முன்பு போலவே எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்துக்கொண்டே இருந்தார். எம்.ஜி.ஆர் ஒருபோதும், “நான் தானே உங்கள் உயிரைக் காப்பாற்றினேன்!” என்று அவரிடம் சொல்லிக்காட்டவில்லை.
பல ஆண்டுகள் கடந்தன. அந்தப் பத்திரிகையாளர் இறந்தார். இறுதிச் சடங்கின் போது, குளிப்பாட்டுவதற்காக அவரது சட்டையைக் கழற்றியபோது எல்லோருக்கும் அதிர்ச்சி. அவருடைய கையில் பச்சை குத்தியிருந்தது. அதில் “இந்த உயிர் எம். ஜி. ராமசந்திரனின் கொடை” என்று எழுதப்பட்டிருந்தது.
இதைக் கண்ட அனைவரும் கண்கலங்கினர்.
மனிதாபிமானத்தின் பாடம்
இன்றைய அரசியலில், விமர்சனம் செய்தால் வழக்கு போடுவது, தாக்குவது, சில சமயங்களில் உயிரையே பறிப்பது போன்ற சம்பவங்கள் சாதாரணமாகிவிட்டன. ஆனால், எதிரியாக இருந்தாலும் உயிருக்குப் போராடும் ஒருவரைக் காப்பாற்றும் உயர்ந்த மனப்பான்மையுடன் வாழ்ந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இதுவே உண்மையான மனிதாபிமானம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக